ஐபிஎல் கிரிக்கெட் பாணியிலான இந்தியன் பேட்மின்டன் லீக் போட்டிகள் டெல்லியில் இன்று துவங்குகிறது. இந்த தொடரில் பெங்களூர் பங்கா பீட்ஸ், ஐதராபாத் ஹாட்ஷாட்ஸ், டெல்லி ஸ்மாஷர்ஸ், மும்பை மாஸ்டர்ஸ், லக்னோ அவாத்தே வாரியர்ஸ், புனே பிஸ்டன்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை மோதும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 5 ஆட்டங்கள் நடைபெறும். இதில் 3ல் வெற்றி பெறும் அணி அந்த போட்டியை வென்றதாக கருதப்படும்.
இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா, அஜய் ஜெயராம், தவுபிக் தாயத் உள்ளிட்டோர் ஐதராபாத் அணியிலும் ஜூவாலா கட்டா, சாய் பிரனீத், பிரனோய் ஆகியோர் டெல்லி அணியிலும் உலகின் நம்பர் ஒன் வீரரான மலேசியாவின் லீ சோங் வெய் மும்பை அணியிலும் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், குருசாய் தத் லக்னோ அணியிலும் காஷ்யாப் பெங்களூர் அணியிலும் அஸ்வினி பொன்னப்பா புனே அணியிலும் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டிக்கான பரிசுத்தொகை ரூ.6 கோடியாகும். வெற்றி பெறும் அணிக்கு ரூ.3.5 கோடி வழங்கப்படும். போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் டெல்லி&புனே அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத்&லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாய்னா&சிந்து நேரடியாக மோதுகின்றனர்.