தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5
ஒசூர்:ஒசூர் சுற்று வட்டார பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒசூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒசூர் பகுதியில் நேற்று கிலோ ரூ.5க்கு விற்பனையானது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு பறிக்கும் கூலிக்கு கூட தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுக்கும் அதிகளவில் தக்காளி வருவதால் வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால், சில விவசாயிகள் பழங்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுவிட்டனர். சில விவசாயிகள் தக்காளியை மாட்டுக்கு தீவனமாக கொடுக்கின்றனர்.