விளையாட்டைவிட கல்விதான் முக்கியம் திருவள்ளூர் பள்ளி நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் காம்பீர் பேச்சு
திருவள்ளூர்:திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர் கலந்துகொண்டார். மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து காம்பீர் பேசியதாவது:
எல்லையில் பாகிஸ் தான் ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் இரு நாட்டுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படாமல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளது.
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு துவண்டு விடாமல் கடுமையாக போராடியதால் மீண்டும் அணிக்கு திரும்பி அதிக ரன் குவிக்க முடிந் தது. அதிர்ஷ்டத்தால் மட்டுமே கிரிக்கெட்டுக்கு வர முடியாது. கடுமையாக உழைத்தால்தான் அணியில் இடம் பிடிக்க முடியும். சிலர் சூதாட்டம் மூலம் கிரிக்கெட் சீர்குலைக்க நினைக்கின்றனர். விளையாட்டை விட கல்விதான் மிக முக்கியம். இவ்வாறு கம்பீர் பேசினார்.விழாவுக்கு பள்ளி தலைவர் ஏ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் ரேவதி பன்னீர்செல்வம், தாளாளர் பா.விஷ்ணுசரண் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கவிதா கந்தசாமி வரவேற்று பேசினார்.