பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப பெற வேண்டும் பிரதமருக்கு பாஜ கோரிக்கை
புதுடெல்லி:இந்திய வீரர்கள் 5 பேரை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாஜ தலைவர் ராஜ்நாத்சிங் கோரிக்கை வைத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த வாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் அவ்வப்போது துப்பாக்கி சண்டை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வரும் பாகிஸ்தானுடன் சமாதானப் பேச்சுகளை நிறுத்த வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான பாஜ வலியுறுத்தியுள்ளது. அடுத்த மாதம் நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பாஜ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என பாஜ தலைவர் ராஜ்நாத்சிங் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. பாகிஸ்தான் உடனான தூதரக உறவுகளை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை உடனடியாக திரும்ப பெறவேண்டும். பாகிஸ்தான் பிரச்னை எல்லை தாண்டிவிட்டது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்திருந்தால் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வந்திருக்காது. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.