ஜெயலலிதாவுக்கு மோடி பாராட்டு
ஐதராபாத்:ஐதராபாத்தில் நேற்று லால் பகதூர் ஸ்டேடியத்தில் பா.ஜ கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘இப்போது நான் ஆந்திராவில் இருக்கும் போது என்னால் என்டிஆரை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் நடத்திய மிகச் சிறந்த அரசியல்வாதியாக அவர் இருந்தார். அவரது கனவு ஆந்திர மாநிலத்தோடு நின்றுவிடவில்லை. காங்கிரஸ் அல்லாத மத்திய ஆட்சியை அவர் விரும்பினார். எனவே, எங்களது கூட்டணியில் முன்பு இடம் பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் கனவை நிறைவேற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இதே போல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் பாராட்டி பேசினார். மோடி கூறுகையில், ‘குஜராத்தின் வளர்ச்சியை ஒரு மாதிரியாக எடுத்து கொள்ள காங்கிரஸ் விரும்பாவிட்டால் பரவாயில்லை. அருகில் இருக்கும் தமிழகத்தை பாருங்கள். அங்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், இளைஞர்களின் திறன்களை பயன்படுத்துவதிலும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தை முன்மாதிரியாக எடுத்து வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்’ என்றார்.