ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மன்னர் போல் செயல்படுவதா? சமாஜ்வாடி தலைவர் கடும் தாக்கு
ராம்பூர்:ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மன்னர்கள் போல் செயல்படுகிறார்கள் என சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கான் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யில் கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில் துணை கலெக்டராக இருந்த துர்கா சக்தி, மணல் மாபியா கும்பல் மீது நடவடிக்கை எடுத்த காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மசூதி சுவரை இடித்து மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துர்கா சக்திக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். ஐஏஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தேவையில்லை என சமாஜ்வாடி கட்சி பகிரங்கமாக அறிவித்தது. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மன்னர்கள் போல் செயல்படுவதாக சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான அசம்கான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களை அடக்கி ஆள்வதற்காக சிவில் சர்வீஸ் உருவாக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகளை குறுநில மன்னர்கள் போல் பாவித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்னர் அந்த சேவையை உடனடியாக கலைத்திருக்க வேண்டும். சுதந்திரத்துக்கு முன்னர் எவ்வாறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதோ அதே பயிற்சி முறை சுதந்திரத்துக்கு பின்னரும் நீடித்து வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள் என்பதை மறந்து விட்டார்கள். பிரிட்டன், ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சிவில் சர்வீஸ் இல்லை. இந்தியாவிலும் சிவில் சர்வீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அசம்கான் கூறினார்.