தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் கொள்ளை குறித்து வருவாய் துறை செயலர் தலைமையில் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினர் இன்று ஆய்வு தொடங்கினர்.தூத்துக்குடி மாவட்டத்தில் 2.25 லட்சம் டன் தாது மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க துறை கமிஷனருக்கு கலெக்டர் ஆஷிஸ்குமார் அறிக்கை அனுப்பினார். அன்றே அவர் சத்துணவு திட்ட துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தாது மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய வருவாய் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்பு குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்து உத்தரவிட்டார்.
வருவாய் துறை செயலரும், ஆய்வு குழு தலைவருமான ககன்தீப் சிங் பேடி சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் தூத்துக்குடி வந்தார். முன்னதாக ஆய்வு குழுவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தை சாராத 15 அதிகாரிகள் வந்திருந்தனர். பின்னர் காலை 9.35 மணி முதல் 10.15 மணி வரை தூத்துக்குடி புதிய விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ரவிக்குமார் மற்றும் ஆய்வுக் குழுவினருடன் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
முதல்வர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 குவாரிகளில் ஆய்வு செய்வோம். இங்கு 6 குழுவினர் வந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு சீனியர் டெபுடி கலெக்டர், நில அளவை துறை உதவி இயக்குனர், சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாவட்ட பொறியாளர், மண்ணியல் மற்றும் கனிம வளத்துறையை சேர்ந்த இணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் எங்களுடன் தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இருப்பர்.
குவாரி தரப்பினர், பொதுமக்கள், மீனவர்களிடம் கருத்து கேட்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் மட்டுமே ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு ககன்தீப் சிங் பேடி கூறினார்.ஆய்வு குழுவினர் ஒரு மாதத்துக்குள் தங்களது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.