பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
மீனம்பாக்கம்:மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்ற அவர், முன்னதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவலை பாஜ அரசியல் ஆக்க நினைக்கிறது. ஆனால் பாஜ ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவம், 4,200 முறை ஊடுருவல் செய்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சியில் 252 முறை மட்டுமே ஊடுருவல் செய்தது. நம்மை பொறுத்தவரையில் பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டு தாக்குதலையும் முறியடிக்க நமது நாட்டு ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பொறுமைக்கும் எல்லை உண்டு. பாகிஸ்தான் ராணுவம் இனி வாலாட்டினால் சரியான பதிலடி கொடுப்போம்.
உணவு பாதுகாப்பு சட்ட மசோதா தொடர்பாக திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கூறும் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து தகுதியான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத விதத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.