கிராம சபை கூட்டத்தில் மதுக்கடைகளை மூட தீர்மானம் கொண்டுவர வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை விருதுநகர் மாவட்டம் வடமலாபுரத்தில் புதிய மதுக்கடை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் ஜூலை 1ம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், மதுக்கடையை திறக்க ஜூலை 24ஆம் தேதி அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பால் வசந்த குமார், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ‘‘ ஓர் ஊரில் மதுக்கடை திறக்கக் கூடாது என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, வடமலாபுரத்தில் புதிய மதுக்கடையை திறக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஒரு கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு எதிராக அந்த கிராம சபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால், அந்த மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்ற சட்டம் மராட்டியத்தில் உள்ளது. அந்த சட்டத்தின் அம்சங்களை தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கான விதையை தனது தீர்ப்பின் மூலம் ஐகோர்ட் விதைத்துள்ளது.
எனவே தமிழக அரசு மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும். வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ள கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.