பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திரதியோவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நரிக்குறவர் சமுதாயத்தினர் ஏராளமானோர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மிகவும் அவல நிலையில் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அடிக்கடி தங்களின் இடங்களை அவர்கள் மாற்றிக் கொள்வதால் அவர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு இடம் இல்லாத நிலை உள்ளது. மற்ற சமூகத்தினரை விட அவர்கள் சமூக ரீதியாகவும், கல்வியிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். பழங்குடியின மக்களுக்கு சமமான சமூகத்தைச் சேர்ந்த நரிக்குறவர்களுக்கு கருணை காட்டி அவர்களுக்கு உதவக்கூடிய வாய்ப்புகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியின்போது நரிக்குறவ சமூக மக்களின் முன்னேற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. கடந்த 1970களில் இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் ஒரே இடத்தில் குடியேறி வாழ்ந்தனர். கடந்த 2008&2009ல் திமுக அரசால் நரிக்குறவர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான நிதி உதவிகள் செய்யப்பட்டன.
தங்களின் கல்வி மேம்பாட்டுக்காக பழங்குடியினர் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோரி நரிக்குறவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வரலாற்றின்படி அவர்கள் பழங்குடியினர்கள்தான். எனவே, நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியல் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.