டிரைவரை கட்டி போட்டு காரை கடத்திய வாலிபர்கள்
திருப்பூர்:கரூர் சின்னாண்டியப்பன் வீதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சந்திரபோஸ் (30). இவர் திருப்பூரில் வாடகைக்கு கார் டிரைவர். 9ம் தேதி காலை திருப்பூர் எஸ்.ஏ.பி.பஸ் நிறுத்தம் அருகே சந்திரபோஸ் நின்று கொண்டு இருந்தார். அங்கு வந்த 3 வாலிபர்கள் கொடிவேரிக்கு சுற்றுலா செல்ல கார் வாடகைக்கு பேசினர். பின்னர் 3 பேருடன் சந்திரபோஸ் கொடிவேரிக்கு வாடகைக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து கொடுமுடிக்கு சென்றனர். அங்கு 3 பேரும் ஆற்றில் குளித்து விட்டு மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தபோது, திடீரென 3 வாலிபர்களும் டிரைவர் சந்திரபோசை தாக்கி கை, கால்களை கட்டி காருக்குள் போட்டனர். அதில் ஒருவர் காரை கரூர் நோக்கி ஓட்டிச் சென்றார். கரூர் பைபாஸ் பைவ் கார்னர் பகுதியில் சந்திரபோசை கீழே தள்ளி விட்டு காரை கடத்தினர்.
இதுகுறித்து சந்திரபோஸ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் போலீசார் அந்த காரை மடக்கினர். அதில் இருந்த 3 வாலிபர்களையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சட்டையப்பனூரைச் சேர்ந்த வீராசாமியின் மகன் முருகன், முருகனின் மகன் கண்ணன், சாமிநாதனின் மகன் கருப்பசாமி என்பது தெரியவந்தது. பணத்துக்காக டிரைவரை தாக்கி 3 பேரும் காரை கடத்திச் சென்றது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.