லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள், விடுமுறையை கழிக்க சொந்த நாட்டுக்கு செல்லும் போது தங்களது மகள்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதை எதிர்த்து இங்கிலாந்து அரசு தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இங்கிலாந்து நாட்டில் இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் கல்வி, வேலை வாய்ப்புக்காக சென்று அங்கேயே குடியேறி விடுகின்றனர். இவ்வாறு இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள், ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விடுமுறையை கழிக்க தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
அவ்வாறு திரும்பும் இந்தியர்களில் பெரும்பாலானோர், இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்த தங்களது மகள்களுக்கு இந்தியாவில் தங்களது சொந்தங்களில் மணமகனை தேர்வு செய்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கின்றனர். இதுதொடர்பாக பல புகார்கள் வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரசா பே கூறியதாவது:விடுமுறையை கழிக்க சொந்த நாடுகளுக்கு செல்லும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பெற்றோர், தங்களது மகள்களுக்கு விடுமுறையின் போது வலுக்கட்டாயமாக தங்களது சொந்த நாடுகளை சேர்ந்த உறவினர்களின் வாரிசுகளை திருமணம் செய்து வைக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் இதுபோல் 400க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன. இதுபோன்ற கட்டாய திருமணங்கள் இங்கிலாந்து நாட்டில் சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
எனவே, ஆசிரியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோர் கட்டாயத் திருமணத்துக்கு எதிராக இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரசா கூறினார்.கடந்த ஆண்டு மட்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக 744 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதில் 600க்கும் மேற்பட்டவை 26 வயதுக்கும் குறைவான இந்திய வம்சாவளி பெண்களுக்கு நடந்த திருமணங்கள் என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.