மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சீலிங் உடைந்து விழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு விமான முனையம் கட்டும் பணி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியது. ரூ.2,015 கோடி செலவில் நடந்த இந்த பணி கடந்த 2012ம் ஆண்டு நிறைவடைந்தது. கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி திறந்து வைத்தார். இதையடுத்து, உள்நாட்டு முனையம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் 13ம் தேதி அன்று அதிகாலை 2 மணி அளவில் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் உள்ள சீலிங் திடீரென உடைந்துவிழுந்தது. அந்த நேரத்தில் பயணிகள், ஊழியர்கள் இல்லாததால் பெரும் பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்ட இடத்தை விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வேணுகோபால், விமான ஆணைய குழு தலைவர் அகர்வால் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது ஆணையர் அகர்வால் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் பெய்த மழையால் கசிவு ஏற்பட்டு பால் சீலிங் உடைந்துவிட்டது. எனவே, மழைநீர் கசிவு தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டோம். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காதுÕÕ என்றார்.இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு பயணிகள் புறப்பாடு பகுதியில் உள்ள சிலிங் இன்று அதிகாலை 1.20 மணிக்கு திடீர் என உடைந்து விழுந்தது. சுமார் 100 அடி நீளம், 2அடி அகலத்துக்கு உடைந்து விழுந்துள்ளது. பயங்கர சத்தம் கேட்டதால் அங்கு இருந்த காவலாளிகள் ஓடிப் போய் பார்த்தனர். உடைந்து விழுந்த நேரத்தில் பயணிகளும் ஊழியர்களும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விரைந்தனர். இடிபாடுகள் அகற்றும் பணி நடந்தது.அடுத்தடுத்து சீலிங் உடைந்து விழுந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏசி பிளான்ட்டில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சீலிங் நனைந்துள்ளது. இக்காரணத்தால் சீலிங் உடைந்து விழுந்துள்ளதுÕ என்றனர்.இது சம்பந்தமாக விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.