தரங்கம்பாடி:நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த பிள்ளைபெருமாநல்லூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. கடற்கரையில் இருந்து 3 கிமீ தூரத்தில் மின் உற்பத்திக்காக நாப்தால் எரிபொருள் கொண்டு வரும் கப்பல் நிறுத்தும் இடத்தில், நாப்தால் கொண்டு செல்லும் குழாய்க்கு பாதுகாப்பாக ‘வைஷ்ணவி‘ என்ற பராமரிப்பு படகு நிறுத்தப்பட்டிருக்கும்.
நேற்று மின்நிலைய தொழிலாளர்கள் 16 பேர் வேறொரு படகில் பராமரிப்பு பணிக்கு சென்றனர். நாப்தால் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது வைஷ்ணவி படகு திடீரென பிடித்து எரிய தொடங்கியது. இதில், தாழம்பேட்டையை சேர்ந்த தினேஷ்(19), வீரதாஸ்(24), கார்த்தி(21), ஆறுமுகம்(55), சென்னையை சேர்ந்த பாலாஜி (25) பண்ருட்டியை சேர்ந்த பாலமுருகன்(32), வானகிரியை சேர்ந்த தங்கதுரை(24), பூம்புகாரை சோர்ந்த காந்தலிங்கம், திண்டிவனத்தை சேர்ந்த ரங்கல் மற்றும் கவியரசன், கொண்டல்ராவ், பெர்னான்டோ ஆகிய 12 பேர் தீக்காயமடைந்தனர். படகை ஓட்டிச் சென்ற மணிகண்டன், படகில் சென்ற சுந்தரராஜன், சுகுமார், ராம்குமார் காயமின்றி தப்பினர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு முதலுதவிக்குப் பின் மேல்சிகிச்சைக்காக காரைக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் தினேஷ் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பராமரிப்பு பணியின் போது நாப்தால் கசிந்ததால் மோட்டாரில் ஏற்பட்ட சிறு மின்பொறி கிளம்பி தீப்பிடித்தாக கூறப்படுகிறது.