பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிஷ்த்வாரில் கலவரம்: ஜம்முவில் பாஜ பந்த் ராணுவம் குவிப்பு
ஜம்மு:காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நேற்று மதக்கலவரம் மூண்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைக் கண்டித்து ஜம்மு பகுதியில் பாஜ இன்று பந்த் அழைப்பு விடுத்துள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 500 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். காஷ்மீர் விடுதலையை ஆதரித்து ஊர்வலத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு பிரிவினர் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
முஸ்லிம் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கிஷ்த்வார் நகரில் காட்டு தீ போல் பரவியது. இதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இரு பிரிவினரும் சில இடங்களில் மோதிக் கொண்டனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மோதலை கட்டுப்படுத்த 2 கம்பெனி ராணுவம் வரவழைக்கப்பட்டது. நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையும் மீறி பல இடங்களில் மோதல் தொடர்கிறது.
இந்நிலையில் கிஷ்த்வார் மதக்கலவரத்தை கண்டித்து இன்று ஜம்மு பகுதியில் ஒரு நாள் பந்த் போராட்டத்துக்கு பாஜ அழைப்பு விடுத்துள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக 500 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கிஷ்த்வார் கலவரத்தை கண்டித்து ஹுரியத் அமைப்பு சார்பாக இன்று வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.