சமந்தா அணிந்த உடைகள் ஏலம்
சென்னை: சமந்தா அணிந்த உடைகள் ஏலத்துக்கு வருகின்றன. ஹாலிவுட், பாலிவுட்டில் பிரபல நடிகர், நடிகைகள் அணிந்த உடைகள் ஏலம் விடுவது அவ்வப்போது நடக்கிறது. அந்த பாணி கோலிவுட்டில் பரவி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு குஷ்பு அணிந்த உடைகள் ஏலம் விடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது சமந்தாவின் உடைகள் ஏலம் விடப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் அவர் நடித்த உடைகள் இதற்காக சேகரிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள், பெண்கள் நலன் வளர்ச்சி அமைப்பு இதற்கான ஏற்பாடு செய்துள்ளது.
இதுபற்றி சமந்தா கூறியதாவது: ஆடியோ விழாக்கள், விருது விழாக்களில் நான் அணிந்த சில உடைகள் ஏலம் விட திட்டமிடப்பட்டிருக்கிறது. குழந்தைகள், பெண்களின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வரும் ‘பிரத்யுஷாÕ என்ற அமைப்புக்காக இந்த ஏலம் நடக்கிறது. இதுபோன்ற சமூக அமைப்புகள் வளர்ச்சிக்கு உதவ வேண்டியது கடமை. பொறுப்புணர்வுடன் கூடிய இளைஞர்கள் சிலர் இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர். இதற்கு உதவுவதில் சந்தோஷம்.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார். தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்க உள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.