அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயமில்லை : மத்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: அரசின் சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என மத்திய திட்டமிடல் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா ராஜ்ய சபாவில் தெரிவித்தார். இதுகுறித்து ராஜீவ் சுக்லா எழுத்துபூர்வமாக அளித்த பதில் ஒன்றில் கூறும் போது, மத்திய அரசின் சேவைகளை பெற ஆதார் அடையாள அட்டை அவசியம் இல்லை. எனினும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம், நேரடி மானிய திட்டம் போன்றவற்றுக்கு ஆதார் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். இருந்த போதிலும் வங்கி கணக்குகள் தொடங்குவது, மாணவர் சேர்க்கை, பாஸ்போர்ட் போன்ற மத்திய அரசின் சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை.
நேரடி மானிய திட்டம் தொடங்கபட்ட இடங்களில் 3 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை பெற வேண்டும். இந்த திட்டம் தற்போது 20 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பதிலில், ஜூலை 26 வரை 39.36 கோடி பேர் ஆதார் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே விண்ணப்பித்திருந்த 42.65 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.