தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜ
புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜ மீது திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் எல்லையில் 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
பாகிஸ்தான் ராணுவ உடையணிந்த தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி முன்பு தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் அந்தோணி அளித்த விளக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர் செயல் என்று தெரிவித்தார். பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், காமன்வெல்த் மாநாட்டின் போது பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்போடு பேச்சுவார்த்தை நடத்த கூடாது என்றும் பாஜ தலைவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான திக்விஜய்சிங் கூறுகையில், தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயல்வது துரதிர்ஷ்டவசமானது. ஏ.கே.அந்தோணி மூத்த அரசியல்வாதியும், பழுத்த அனுபவமும் உடையவர். தாக்குதல் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.