பாட்னா: ராணுவத்தில் சேர்வதே சாவதற்குத்தான் என்ற கருத்து கூறிய பீகார் அமைச்சர், முதல்வர் நிதிஷ்குமார் எச்சரிச்கையை தொடர்ந்து, பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்திய எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 5 இந்திய வீரர்களை சுட்டு கொன்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 வீரர்களின் உடல்கள் நேற்று விமானம் மூலம் பாட்னா கொண்டு வரப்பட்டது. அப்போது அதனைப் பெற அங்கு வந்த கிராமப்புறத் துறை அமைச்சர் பீம்சிங்கிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்ட போது, ‘ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் சேர்வதே சாவதற்குத்தான்’ என்று உளறி விட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக பாஜ செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும் போது, ‘வீரர்களின் உயிர் தியாகத்திற்காக நாடே அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் போது, ஒரு அமைச்சரின் பேச்சு அதனை கொச்சைப்படுத்தியுள்ளது வெட்கக்கேடானது’ என்று தெரிவித்தார். இதுகுறித்து பீம்சிங் கூறுகையில் ‘எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளனர். நான் அவ்வாறு கூறவில்லை. எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த சம்பவத்தின் போது முதல்வர் நிதிஷ்குமார் டெல்லியில் இருந்தார். அதன்பின் அவர் பாட்னாவுக்கு புறப்பட்டு வந்தார். அங்கு விமானநிலையத்தில் நிதிஷ்குமாரிடம் பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேட்ட போது, ‘அமைச்சரின் இந்த கருத்து ஆழ்ந்த வருத்தத்திற்குரியது. எனக்கு தெரியவந்தவுடன் அவரை தொடர்பு கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தினேன். அவரும் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார். மேலும் உயிரிழந்த வீரர்களுக்கு மத்திய அரசு அறிவித்தது போக கூடுதல் இழப்பீட்டையும், மேலும் ரூ.10 லட்சம் நிதி அவர்களது குடும்பத்திற்கு எனது அரசு வழங்கும்’ என்றார்.