ஜவுளிக்கடை அதிபர் கொலை சரணடைந்த பழ வியாபாரியை காவலில் விசாரிக்க போலீஸ் முடிவு
மயிலாடுதுறை:மயிலாடுதுறை ஜவுளிக் கடை அதிபர் கொலை வழக்கில் சரணடைந்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (42), ஜவுளிக் கடை அதிபர். இவர் கடந்த மாதம் 29ம் தேதி இரவு கடையில் இருந்து வீட்டுக்கு வந்த போது மர்ம நபரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து கொலையாளி குறித்து விசாரித்து வந்தனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படையும் அடைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்த ராம் என்பவரின் மகன் சிரஞ்சீவி (28) என்பவர் கடந்த 2ம் தேதி ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை மயிலாடுதுறை போலீசார் நேற்று கோவையில் இருந்து அழைத்து வந்து மயிலாடுதுறை 1வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கமணி கணேசன், அவரை வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிரஞ்சீவியை மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவரை மயிலாடுதுறை போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.