புழல்:கடன் பிரச்னையில் சிக்கித் தவித்த மருந்து விற்பனை பிரதிநிதி, மனைவி, மகள் மற்றும் மாமியாருடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம், செங்குன்றம் அருகே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றம் அடுத்த கோட்டூர் கோமதி அம்மன் நகர் 1&வது தெருவில் வசித்தவர் சரவணன் (24). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். மனைவி ஹேமலதா (20). இவர்களுக்கு கனிஷ்கா என்ற மகள் இருந்தாள். ஹேமலதா, தற்போது 8 மாத கர்ப்பமாக இருந்தார். இவர்களுடன் ஹேமலதாவின் அம்மா மலர்விழியும் (60) தங்கியிருந்தார்.
சரவணனுக்கு வேலையில் சரியான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தார். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அடிக்கடி கடன் வாங்கி செலவு செய்து வந்ததாக தெரிகிறது. அளவுக்கு மீறி கடன் வாங்கியதால் அதில் இருந்து மீள முடியாமல் சரவணன், வேதனையில் இருந்து வந்தார். வேலையிலும் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர். இதனால், கடனை அடைக்க பணம் வேண்டும் என்று மாமியாரிடம் கேட்டுள்ளார். அவரோ, தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் சரவணன் மேலும் வேதனையில் தவித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரவணன், கடன் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். கணவர் வேதனையுடன் பேசியதை கேட்டு வருத்தப்பட்ட ஹேமலதா, அவரை சமாதானப்படுத்தினார். அப்போது திடீரென சரவணன் தான் வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹேமலதா கதறித் துடித்தார். பின்னர் மீதமிருந்த மருந்தை தானும் குடித்துவிட்டு மகளுக்கும் கொடுத்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த மலர்விழி மகள், மருமகன், பேத்தி மூவரும் விஷம் குடித்து துடிதுடிப்பதை பார்த்து திடுக்கிட்டார். அங்கே கிடந்த பாட்டிலில் விஷ மருந்து மீதமிருந்தது. அதை எடுத்து மலர்விழி குடித்துவிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் திரண்டு வந்தனர். வீட்டுக்குள் மயங்கிக் கிடந்த 4 பேரையும் மீட்டு உடனடியாக மொண்டியம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து அப்பகுதி மக்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து சென்று, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கடன் பிரச்னை காரணமாக அவர்கள் தற்கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.கடன் தொல்லையால் கணவன், மனைவி, மகள் மற்றும் மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், செங்குன்றம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.