சைக்கோ கதைக்காக வேலூரில் ஷூட்டிங்
சென்னை:சைக்கோ கதையான ‘நூறாம் நாள் படத்திற்காக வேலூர் அருகே கராத்தே சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் ராஜாதேசிங்கு கூறியது:தன் நண்பனை பற்றி யாராவது தவறாக பேசினால்கூட அந்த நபரை கொன்றுவிடும் அளவுக்கு சைக்கோ குணம் படைத்தவர் ஹீரோ விஜய் சிரஞ்சீவி. ஒரு கட்டத்தில் வேறு காரணத்துக்காக ஒரு குடும்பத்தையே கண் இமைக்கும் நேரத்தில் கொலை செய்துவிடுகிறார். எதற்காக இந்த கொலைகளை செய்தார். பின்னணி என்ன என்பதை திடுக்கிட வைக்கும் வகையில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
விஜய் சிரஞ்சீவி ஜோடியாக சாய்னா நடிக்கிறார். மற்றொரு நாயகனாக தோனி நடிக்கிறார். மற்றும் மிருதுளா, நிவேதாஸ்ரீ, பாண்டியராஜன், கோவை சரளா ஆகியோருடன் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கராத்தே மாஸ்டராக நடிக்கிறார். ராஜா ஒளிப்பதிவு. முராள் இசை அமைக்கிறார். தயாரிப்பு இ.பாலசுப்ரமணி, ஜி.ஆர்.உஷாரவி. 500 கராத்தே வீரர்களுக்கு மத்தியில் ஜாக்குவார் தங்கம், விஜய் சிரஞ்சீவி மோதிய சண்டை காட்சி வேலூர் அருகே 7 நாட்கள் படமாக்கப்பட்டது.இவ்வாறு இயக்குனர் ராஜாதேசிங்கு கூறினார்.