பாட்னா:பீகார் மாநில பாஜ தலைவர்களில் ஒருவரான நடிகர் சத்ருகன் சின்காவை தங்கள் கட்சியில் சேருமாறு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ளது. பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்கா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். பாட்னா தொகுதி எம்பியாகவும், மாநில பாஜவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அண்மைக்காலமாக பாஜவின் பிரதமர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
ஒருவர் பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றால், அமிதாப் பச்சனையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என அண்மையில் பேட்டி அளித்தார். பிரதமர் பதவிக்கான அனைத்து தகுதிகளும் பாஜ கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு இருப்பதாக பொது கூட்டம் ஒன்றில் பேசினார். இவரது பேச்சுக்கள் பாஜவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. பொது மேடைகளில் இவ்வாறு பேச வேண்டாம் என சத்ருகன் சின்காவுக்கு பாஜ மேலிடம் அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜ திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் சத்ருகன் சின்காவுக்கு நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்ருகன் சின்காவுக்காக ஐக்கிய ஜனதா தளத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியில் இணையலாம். அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.