டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 15, 16 மற்றும் 17 தேதிகள் என தொடர்ந்து 3 நாள் கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த மாநிலத்தில் ஓடும் கங்கை உள்ளிட்ட 6 நதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இது தவிர நூற்றுக்கணக்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த மாநிலத்துக்கு ஆன்மிக சுற்றுலா வந்த 1 லட்சம் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் ஆங்காங்கு சிக்கினர். சுமார் 10 நாட்கள் நடைபெற்ற மீட்பு பணிக்கு பின்னர் சுமார் 10 ஆயிரம் பேர் தவிர மற்றவர்கள் மீட்கப்பட்டனர். 6 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பெரு வெள்ளத்துக்கு பலியான கால்நடை விவரங்களை மாநில வேளாண்மை துறை நேற்று வெளியிட்டது. இதன்படி வெள்ளம் பாதித்த ருத்ரபிராயர், சமோலி மற்றும் உத்தர்காசி மாவட்டங்களில் 18 ஆயிரத்து 228 கால்நடைகள் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளன. 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. இந்த கிராமங்களில் கால்நடை தீவனங்கள் ஹெலிகாப்டர் வாயிலாக போடப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ரூ.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை வேளாண்மை துறை முதன்மை செயலர் ரன்வீர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில் உத்தரகண்டில் நேற்றும் பல இடங்களில் கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.