சிறு வயதில் சேட்டை செய்து விட்டு பெற்றோரிடம் அடி வாங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் பள்ளியில் ஆசிரியரிடம் அடி வாங்காதவர்களும் குறைவுதான். இதெல்லாம் அந்தக் காலத்தில் சகஜம். இதையெல்லாம் தாண்டித்தான் எல்லோரும் வந்திருப்பார்கள். அடி வாங்கிய மறு நிமிடமே அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் விளையாட கிளம்பி விடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. வயதுக்கு ஏற்ப சிறுவர்கள் நடந்து கொள்வதில்லை. எதிர்பாராத காரியங்களை எல்லாம் செய்து விடுகிறார்கள். அப்பா அடிப்பாரோ என பயந்து 6ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கிறான்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கல்குமி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. கூலித் தொழிலாளி. மகன்கள் அய்யனார் என்ற அஜீத்குமார், ராஜ்குமார். சிங்கிலிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முறையே 7 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். காலையில் வழக்கம் போல் முனியசாமி, அவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பள்ளி விடுமுறை என்பதால் மகன்கள் இருவரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாக்கெட் மணியாக 10 ரூபாயை முனியசாமி, 2வது மகனிடம் கொடுத்து விட்டு வேலைக்கு சென்றார். அந்த 10 ரூபாயில் சிறுவன் ராஜ்குமார், அண்ணனுக்கு ஏதும் கொடுக்காமல் தானே மிட்டாய் வாங்கி சாப்பிட்டுள்ளான். இதைப் பார்த்த அண்ணன் அய்யனார், தந்தை வீட்டுக்கு வந்ததும் புகார் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளான். பயந்து போன ராஜ்குமார், வீட்டில் கதவை பூட்டி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டான். உடல் கருகிய சிறுவனை அக்கம், பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சிறுவன் ராஜ்குமார் பரிதாபமாக இறந்துவிட்டான். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர், ஆசிரியர் மீது மரியாதைதான் இருக்க வேண்டும். பயம் தேவையில்லை. பெற்றோரும் பிள்ளைகளை கண்டிக்கும்போது, அவர்கள் பயப்படும்படி கடுமையாக தண்டிக்கக் கூடாது. இதனால் தேவையில்லாத பிரச்னைகள்தான் வரும். தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள்தான், சூழ்நிலையை உணர்ந்து தைரியமாக வளர்வார்கள். பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு சமாளிப்பார்கள். மாறாக, குழந்தைகள் மனதில் பயத்தை ஏற்படுத்தினால் அவர்கள் கோழைகளாகி விடுவார்கள்.