மும்பை: மோடியை ஆதரிக்கும் குஜராத்திகள், மகாராஷ்டிராவை விட்டு வெளியேற வேண்டும்Õ என்று டுவிட்டரில் அமைச்சர் மகன் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதுமே, மகாராஷ்டிரா, அசாம், மேற்குவங்கம், உத்தர பிரதேச மாநிலங்களிலும் தனி மாநில கோரிக்கை சூடுபிடித்தது. மாநிலத்தை பிரிக்க கோரி போராட்டங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளன. இதனால் 4 மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் ஷோபா டே தனது டுவிட்டரில், ‘மகாராஷ்டிராவில் இருந்து பிரித்து மும்பையை ஏன் தனி மாநிலமாக ஆக்க கூடாது? அதற்கான எல்லா தகுதிகளும் மும்பைக்கு உள்ளது’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜ, சிவசேனா, நவ நிர்மான் உள்ளிட்ட கட்சியினர் ஷோபா டேவை மிகவும் ஆபாசமாக வசை பாடினர். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான நாராயண் ரானேவின் மகன் நிதிஷ் ரானே, ‘மோடியை ஆதரிக்கும் குஜராத்திகளே, மராட்டியர்களின் பூமியை விட்டு ஓடுங்கள் குஜராத்துக்கு’ என்று டுவிட்டரில் எழுதி உள்ளார். இதனால் அங்கு கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து நிதிஷ் ரானே தெரிவிக்கையில், ‘குஜராத் அரசு சைவ குடியிருப்புகளை கட்டி வருகிறது. அதே போல் மகாராஷ்டிரத்தையும், சைவ ஓட்டல்கள், சைவ குடியிருப்புகள், சைவ மருத்துவமனைகள் என மாற்றி வருகின்றனர்.
மோடியை ஆதரிக்கும் குஜராத்திகள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி குஜராத்துக்கு செல்ல வேண்டும். மகாராஷ்டிராவை சைவமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரது டுவிட்டர் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.