திருச்சி, மணப்பாறை, துறையூரில் பாஸ்போர்ட் ஊழியர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு
திருச்சி:திருச்சியில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மரக்கடை பகுதியிலும், சேவை மையம் சாஸ்திரி ரோட்டிலும் செயல்படுகின்றன. திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் முறைகேடாக பாஸ்போர்ட் வினியோகிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சக உத்தரவை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் திருச்சியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களின் திருச்சி, துறையூர், மணப்பாறை வீடுகளில் அதிரடி சோதனை நடந்தது. திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலமும், முறைகேடாகவும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை டெல்லியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக உயரதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் அலுவலர் அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில், பாஸ்போர்ட் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பணியில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் ஏராளமான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.