கியூபாவில் போலி ரம் குடித்த 11 பேர் சாவு
ஹவானா:கியூபாவில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் பலியானார்கள். 60 பேர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
கியூபா லா லிசா மாவட்டம் ஹவானா புறநகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்கப்படுகின்றன. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொருட்களை வாங்குவதற்காக சென்ற ஏராளமானோர் ரம் வாங்கியுள்ளனர். அதை குடித்ததும் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுதொடர்பான செய்தி கியூபா மீடியாக்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடையில் ரம்முக்கு பதில் மெத்தனால் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடைக்கு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் 2 பேர் ஆல்கஹால் சப்ளை செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள். இதுதொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.