திருப்பதியில் ரூ.2 லட்சம் நகை திருடிய பெண் கைது
திருமலை: திருப்பதியில் பக்தர்களிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். திருப்பதிதிருமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சித்தூர் மாவட்டம் நாராயணவனம் மண்டலம் திருவட்டம் கிராமத்தை சேர்ந்த காந்தம்மா (45) என்பதும், பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 72 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.