கூடலூர்:கம்பம் அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் லோயர்கேம்பைச் சேர்ந்த ராணி(15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 10ம் தேதி வயிற்றுவலி காரணமாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றது மைனர் பெண் என்பதால், கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் சையதுசுல்தான் கலெக்டருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். சிறுமியை மதுரையிலுள்ள மகளிர் காப்பகத்தில் சேர்க்கவும், குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கவும் கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் கூடலூர் இன்ஸ்பெக்டர் பாலகுமார் தலைமையில் போலீசார் மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் மரியலூர்து மகன் சலேத்நாதன்(25) தன்னை பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார்.ராணியின் தாயாரும், சலேத்நாதன் தாயார் பாண்டியம்மாள் என்பவரும் உடன்பிறந்த சகோதரிகள். தாய், தந்தையை இழந்த ராணி, லேயர்கேம்ப் பென்னிகுக் நகரிலுள்ள சித்தி பாண்டியம்மாள் வீட்டில் தங்கியுள்ளார். பாண்டியம்மாள் ஏலத்தோட்ட வேலைக்கு, காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவார். இதைப்பயன்படுத்தி சலேத்நாதன், ராணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது.
குமுளி பகுதியில் சுற்றிய சலோத்நாதனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராணியை பலாத்காரம் செய்ததை சலேத்நாதன் ஒப்புக்கொண்டார்.சிறுமிக்கும், குழந்தைக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. சலேத்நாதனுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.