செங்கல்பட்டு: பூரண மது விலக்கை வலியுறுத்தி மதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 நாட்கள் நடைபயணம், பிரசாரம் கடந்த 18ம் தேதி கோவளத்தில் தொடங்கியது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பிரசார நடைபயணத்தில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். சில இடங்களில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழா நேற்று மாலை மறைமலைநகரில் நடந்தது. இதில் வைகோ, பேசியது: மதுவை ஒழிக்க 11 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட போது அரசியல் நாகரிகத்தோடு அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி தோழர்களும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருக்குறள், பைபிள், திருக்குரான் போன்றவற்றில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதுவினால் பல்வேறு கொலை, கொள்ளை நடந்து வருகிறது.
இளைஞர்கள்தான் அதிகளவில் மது அருந்துகிறார்கள். அரசை கேட்டு கொள்வது மதுக்கடைகளை மூடுங்கள், அப்படி மூடுவதால் உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வரும். எங்களுக்கு பொறாமை ஏற்படாது. கடைகளை மூடுகிற நிலைக்கு வாருங்கள், இல்லையென்றால் மக்களை திரட்டி மூடுகிற வேலையில் ஈடுபடுவோம். சிங்கள ராணுவம் மனிதநேயமற்ற முறையில் இலங்கை தமிழர்களை படுகொலை செய்துள்ளது. சமீபத்தில் வெளியான பாலசந்திரன் படுகொலை உலகையே உலுக்கியுள்ளது. இதற்கு இந்தியாவும் துணை நின்றுள்ளது. இலங்கைக்கு எதிராக உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தமிழகத்தில் மதுவில்லா சமுதாயம் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தமிழருவி மணியன், ஜவாஹ¤ருல்லா எம்எல்ஏ, மதிமுக அவைத் தலைவர் துரைசாமி, மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, இந்திய சோஷலிச ஜனநாயக கட்சி தலைவர் தெகலான் பார்கவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.