இங்கிலாந்து வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை : 81 வயது கும்பல் தலைவன் மரணம்
லண்டன்: இங்கிலாந்து வரலாற்றில் மிகப் பெரிய ரயில் கொள்ளையில் ஈடுபட்டவர் 81 வயதில் காலமானார். இங்கிலாந்தின் பிரன்ட்போர்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஸ்காட்லாந்துக்கு கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ரயில் புறப்பட்டது. அதில் மூட்டை மூட்டையாக (21 கோடி ரூபாய். இப்போது இதன் மதிப்பு 328 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது) கரன்சிகள் அனுப்பப்பட்டது. இந்த ரயில் லெட்பர்ன் அருகில் சென்ற போது, பிரிட்கோ ரயில் பாலத்தில் மர்ம ஆசாமிகள் சிலர் ரயில் பெட்டிக்குள் புகுந்து பாதுகாவலர்கள், ரயில் டிரைவரை தாக்கி பணத்தை கொள்ளை அடித்தனர். இந்த கொள்ளையில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்திலேயே இதுதான் மிகப்பெரிய ரயில் கொள்ளையாக இன்று வரை கருதப்படுகிறது.
தி கிரேட் டிரைன் ராபரி என்றே இந்த கொள்ளையை அழைக்கின்றனர். இந்த கொள்ளை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்ட புரூஸ் ரெனால்ட், பணத்துடன் மெக்சிகோவுக்கு தப்பியோடி விட்டார். கொள்ளை அடித்த பணத்தில் ஜாலியாக இருந்தார். பணம் செலவானதும் மீண்டும் கடந்த 1968 ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தார். அப்போது புரூசை போலீசார் கைது செய்தனர். ரயில் கொள்ளை வழக்கில் 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியில் வந்த பின், தனது கொள்ளை அனுபவங்களை புத்தகமாக எழுதினார். பாப் பாடகராகவும் விளங்கினார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட புரூஸ் தனது 81 வயதில் நேற்று மரணம் அடைந்தார். இதை இவருடைய மகன் நிக் ரெனால்ட் உறுதிப்படுத்தினார்.