கடலில் மூழ்கி அண்ணன், தம்பி பலி காணும் பொங்கலில் சோகம்
மதுராந்தகம்:காணும் பொங்கலையொட்டி சுற்றுலா சென்ற அண்ணன், தம்பி கடலில் மூழ்கி பலியானார்கள். மதுராந்தகம் அருகே நேற்று நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் அப்பாசாமி தெருவை சேர்ந்த சிவசங்கரன் (55). இவரது குடும்பத்தை சேர்ந்த 15 பேர் காணும்பொங்கல் விழாவை கொண்டாட வேன் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் அடுத்த ஆலம்பரை கோட்டைக்கு சுற்றுலா வந்தனர். கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு அங்குள்ள கடற்கரையில் அனைவரும் குளிக்க சென்றனர். அப்போது திடீரென வந்த பெரிய அலையில் 5 பேர் சிக்கினர். உடனே மற்றவர்கள் அலறி சத்தம் போட்டனர். அங்கிருந்த மீனவர்கள் ராட்சத அலையில் சிக்கிய 3 பேரை மீட்டனர்.
இதில் சிவசங்கரன் மகன்கள் பாலாஜி (28), ராஜசேகர் (25) ஆகியோர் கடலில் மூழ்கினர். இதனால் சுற்றுலா வந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து சூனாம்பேடு போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். கடலில் மூழ்கிய அண்ணன், தம்பியை அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வந்தனர்.
நேற்று மாலை கடப்பாக்கம் கடற்கரை பகுதியில் பாலாஜி சடலம் கரை ஒதுங்கியது. ராஜசேகர் சடலம் கிடைக்கவில்லை. போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ராஜசேகர் சடலமும் அதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த இருவரின் சடலம் செங்கல்பட்டு மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் அலையில் சிக்கி அண்ணன், தம்பி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.