சேலம் சேலத்தில் போலி பத்திரம் தயாரித்து ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாத்தியம்பட்டியை சேர்ந்தவர் போடி செட்டி. இவருக்கு கோவிந்தராஜி, வெங்கட்ராமன், கோவிந்த பெருமாள் என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுக்கான குடும்ப சொத்து சில வருடங்களுக்கு முன்பு பிரிக்கப்பட்டது. இதில் கோவிந்த பெருமாளுக்கு பாத்தியப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 4.12 ஏக்கர் நிலம், அவருக்கே தெரியாமல் விற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவிந்தபெருமாள் ஓமலூர் சர்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவரது அண்ணன் மகன்கள் தனசேகரன் (46), சீனிவாசன் (70), துரையன் (60), சந்திரன் (57), முருகன் (52) மற்றும் குருநாதன், அர்ச்சுனன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் சரவணனுக்கு விற்றதோடு பத்திரப்பதிவும் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் கோவிந்த பெருமாள் கேட்டபோது அவரை மிரட்டி அனுப்பி உள்ளனர். இதுகுறித்து கோவிந்தபெருமாள் சேலம் எஸ்பி அஸ்வின் கோட்னீசிடம் புகார் தெரிவித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு போலீசார் வழக்கு பதிந்து தனசேகரன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான குருநாதன் மற்றும் அர்ச்சுனனை தேடி வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook