வாழைகளை நாசப்படுத்தி வருவதால் காட்டு பன்றிகளை பிடிக்கவேண்டும் : மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பா.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் பரிமேழகர், மாவட்ட ஊராட்சி செயலாளர் மைதிலி முன்னிலை வகித்தனர். நவம்பர், டிசம்பர் மாத வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு தீர்மானம் நிறைவேற்றினர். இதில் உறுப்பினர்கள் பேசியதாவது: செல்வகுமாரி அண்ணாதுரை (அதிமுக): மேலகொண்டையார் ஊராட்சியில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. வெங்கல் அருகே உள்ள காட்டில் இருந்து பன்றிகள் வந்து வாழைத் தோட்டத்தை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளை காப்பாற்ற காட்டுபன்றிகளை பிடிக்கவேண்டும். ஸ்ரீதர் (அதிமுக): திருவள்ளூரில் கிராவல் மணல் குவாரி கிடையாது.
இதனால் கிராவல்மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராவல் குவாரி திறக்க வேண்டும். சந்திரன் (அதிமுக): ஆந்திராவில் இருந்து கிராவல் மண் கொண்டுவரப்படுவதால் விலை அதிகமாக உள்ளது.நாராயணமூர்த்தி (அதிமுக): திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு இருப்பதால் விலை அதிகமாக உள்ளது. கட்டிட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாந்தி (திமுக): பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலைகள் பழுதாகி உள்ளது. இந்த சாலைகளை உடனடியாக செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும். தலைவர் ரவிச்சந்திரன்: உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு கலெக்டருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில், கவுன்சிலர்கள் பாசூரான், வெங்கட்ரமணா, சுகாசினி ஜெகபதி, தமிழ்ச்செல்வி, நடராஜன், குமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.