திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம் : வாலிபருக்கு 6 மாதம் கடுங்காவல்
செங்கல்பட்டு: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட் உத்தரவிட்டது. செங்கல்பட்டு அடுத்த வடபாதி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (28). செங்கல்பட்டு ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (25). இருவரும் தனியார் கம்பெனி ஊழியர்கள். 9ம் வகுப்பு வரை செங்கல்பட்டில் உள்ள அரசு பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது விஜயலட்சுமியை ஒரு தலையாக காதலித்துள்ளார் மணிமாறன். இந்நிலையில் 2007ம் ஆண்டு இருவரும் செங்கல்பட்டில் ஏதேச்சையாக சந்தித்துள்ளனர். அதற்கு பிறகு அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர்.
நாளடைவில் இது காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விஜயலட்சுமியுடன் மணிமாறன் நெருக்கமாக இருந்துள்ளார். இதில் விஜயலட்சுமி கருவுற்றார். இதை மணிமாறனிடம் கூறிய விஜயலட்சுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மணிமாறன் மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த விஜயலட்சுமி, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் விஜயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து இருவருமே வேறு திருமணம் செய்து கொண்டனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது டிஎன்ஏ பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதில், விஜயலட்சுமியின் குழந்தை மணிமாறனுக்கு பிறந்தது என உறுதியானது. நேற்று நீதிபதி ஆனந்தி முன்னிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதற்காக மணிமாறனுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.