கேன்சர் பாதிப்பு அவஸ்தை புத்தகம் எழுதுகிறார் மனிஷா
மும்பை: கேன்சர் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவரும் மனிஷா கொய்ராலா சுயசரிதை புத்தகம் எழுதுகிறார். நடிகை மனிஷா கொய்ராலா கடந்த 2 மாதத்துக்கு முன் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்ப்பப்பையில் கேன்சர் பாதித்திருந்ததால் ஆபரேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். ஓய்வு நேரத்தில் ஆன்மிக புத்தகங்களில் மூழ்கிவிடும் மனிஷா சுயசரிதை புத்தகம் எழுத முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘என்னால் இயன்ற ளவுக்கு சிறந்த சிகிச்சை பெறுகிறேன்.
முடிவை ஆண்டவன் தீர்மானிப்பான். என்னை சுற்றி அமைதியான சூழல் நிலவுகிறது. இது எனக்கு பலவற்றை கற்றுத்தருகிறது. ஆன்மிகத் தில் ஈடுபாடு கொண்டதிலிருந்து இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை கற்கத் தொடங்கினேன். இப்போது அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். இது சாபமோ அல்லது என் தவறோ தெரியவில்லை ஆனால் நிஜமாகி இருக்கிறது. இது என்னை வேறு எண்ணத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இதிலிருக்கும் உண்மைகளை கண்டறிய என் எண்ணங்களை எழுத உள்ளேன். நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுவேன். இது என் சுயசரிதையாக அமையும். அதற்கான நேரம் வந்திருக்கிறது. இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது என்றார்.