போதை மிகவும் ஆபத்தானது. தன்னிலை மறக்க வைப்பதால், என்ன செய்கிறோம் எனத் தெரியாமலேயே பல தவறுகளை செய்ய வைக்கும். சாதாரண மனநிலையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடூரமான, அவமானகரமான விஷயங்களைக் கூட நினைக்கவும் செய்யவும் வைக்கக் கூடியது மது. அப்படித்தான் குடிபோதையில், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான் ஒருவன். இதைக் கண்டு கொதித்துப்போன மனைவி, கணவரை அம்மிக்கல்லால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் அருகே உள்ள துவாரகா நகரை சேர்ந்தவர் சுப்புராயுடு. தச்சுத் தொழிலாளி. மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சுப்புராயுடுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் 2 நாள் முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுப்புராயுடு, தூங்கி கொண்டிருந்த 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கி கொண்டிருந்த லட்சுமி எழுந்தார். மகளிடம் தொல்லை செய்த சுப்புராயுடுவை அடித்து இழுத்து தள்ளினார். ‘பெற்ற மகளையே சீரழிக்க பார்த்தாயே எனக் கூறிய படியே அம்மிக்கல்லை எடுத்து வந்த லட்சுமி, போதையில் மயங்கி கிடந்த கணவர் தலையில் போட்டார். ஆத்திரம் அடங்காமல் கத்தியை எடுத்து வந்தும் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுப்புராயுடு துடிதுடித்து இறந்தார். பின்னர், லட்சுமி, பொதட்டூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
குடியால் அழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாங்கும் சம்பளத்தில் பாதியை குடித்து விட்டு வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பதில்லை ஆண்கள். பின் எப்படி வீட்டில் அடுப்பு எரியும்? சம்பள பணத்தை கேட்டால் தினமும் அடியும் உதையும் தான். இதுபோதாதென்று, தேவையில்லாத வம்பையும் விலைக்கு வாங்குவார்கள் குடிகாரர்கள். போதையில் மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்திருக்கிறார் ஒரு குடிகாரர். இதனால், மனைவியின் கோபத்துக்கு ஆளாகி, உயிரையே விட்டுவிட்டார். தந்தை இறந்துவிட்டார், தாய் சிறைக்கு போய் விடுவார். அந்த 14 வயது மகளின் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. இப்படித்தான் போதை காரணமாக தினமும் பல குடும்பங்கள் அழிந்து வருகின்றன. குடிகாரர்கள் திருந்தவேண்டிய நேரம் இது.