போலீஸ் ஸ்டேஷன் மிதிக்க கூடாத இடம் என்று கருதுபவர்கள் பலர். காரணம்.. குற்றம் செய்யும் தரப்புக்கும் விசாரிக்கும் தரப்புக்கும் காக்கி சட்டை என்ற ஒன்று மட்டுமே வித்தியாசம் என்பது அவர்கள் எண்ணம். சில சம்பவங்கள் அதை ஊர்ஜிதப்படுத்தி விடுகின்றன. சாதாரண ஆக்சிடென்ட் வழக்கு. ஆட்டோ டிரைவரை என்கொயரி என்ற பெயரில் அலைக்கழித்து வெறுப்பேற்றி இருக்கிறார்கள் போலீசார். மனம் வெறுத்தவர் ஸ்டேஷனிலேயே தீக்குளித்து இறந்துவிட்டார். சென்னை சூளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை (40). நேற்று முன்தினம் அன்சாரி என்பவது பைக் மீது அவரது ஆட்டோ மோதிவிட்டது. யானைக்கவுனி டிராபிக் போலீசார் விசாரித்தனர். ஆட்டோவை திரும்ப வாங்க முடியாதபடி வலுவான கேஸ் போடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. ‘2 பெண் குழந்தைகள் உள்ளன.
ஆட்டோ வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறோம். வழக்கை வாபஸ் வாங்குங்கள்’ என்று ஏழுமலையும் அவரது மனைவியும் ஸ்டேஷனுக்கு வந்து கெஞ்சியிருக்கிறார்கள். பரிதாபமடைந்த அன்சாரி வழக்கை வாபஸ் பெற ஒப்புக்கொண்டிருக்கிறார். போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்ததால், கொத்தவால்சாவடியில் உள்ள டிராபிக் புலனாய்வு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏழுமலை நேற்று காலை சென்றார். ‘திரும்ப திரும்ப கூப்பிட்டால், எப்படி ஆட்டோ ஓட்டுவது?’ என்று ஏழுமலை கேட்க.. போலீசுக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றியது. விரக்தியடைந்த ஏழுமலை வெளியே வந்தார். ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்தார். திகுதிகுவென எரிந்தபடியே ஸ்டேஷனில் புகுந்தார். சிறிது நேரத்தில் கரிக்கட்டையாக சரிந்தார்.
போலீசார் அவரை கீழ்பாக்கம் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ஏழுமலை இறந்தார். ஏழுமலை தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். நான்தான் படிக்கவில்லை. பிள்ளைகளாவது டாக்டராக வேண்டும் என்று கூறி வந்தார். குடிப்பழக்கம்கூட இல்லாதவர். ‘கஞ்சா அடித்துவிட்டு ஆட்டோ ஓட்டினாயா’ என்றெல்லாம் போலீசார் கேட்டிருக்கிறார்கள். உளைச்சலில் தீக்குளித்துவிட்டார் என்கின்றனர் அக்கம்பக்கத்தினர். சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்பதால் மற்ற துறையினருக்கு இல்லாத பல அதிகாரங்கள் காக்கிச்சட்டை காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை மீறும் கிரிமினல்களிடம்தான் அந்த அதிகாரத்தை காட்ட வேண்டுமே தவிர, அப்பாவிகளிடம் அல்ல. ‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்று சொல்வது போதாது. போலீசார் ஒவ்வொருவரும் அதை நெஞ்சில் பதிக்க வேண்டும்.