இமாச்சல் பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு
சிம்லா: இமாச்சல் பிரதேச சட்டமன்றத்துக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்துடன் இமாச்சல பிரதேச சட்டமன்றத்துக்கு கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. குஜராத் தில் டிசம்பர் மாதம் 13 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டமாகவும், இமாச்சலுக்கு நாளை ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. இமாச்சலில் மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகளில் 459 பேர் களத்தில் உள்ளனர். இந்த மாநிலத்தில் ஆளும் பாஜவுக்கும், முக்கிய எதிர்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் இந்த மாநிலத்தில் தனித்து போட்டியிடுகிறது. முன்பு கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மாயாவதி கட்சி 66 இடங்களில் தனித்து போட்டியிடுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 46 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாளைய வாக்குப்பதிவுக்காக 7253 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மாநில போலீசுடன் மத்திய அரசின் இந்தோ திபெத் எல்லை படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.