காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக அபிஷேக் சிங்வி மீண்டும் நியமனம்
புதுடெல்லி: சிடி சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக நாடாளுமன்ற கமிட்டி தலைவர், காங்கிரஸ் மீடியா செல் துணை தலைவர் பதவிகளிருந்து விலகிய அபிஷேக் மனு சிங்விக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வரும் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி அக்கட்சியின் செய்தி தொடர்பாளராகவும், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற கமிட்டியின் துணை தலைவராகவும் பணியாற்றி வந்தார். தனது பெண் உதவியாளருடன் இவர் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சிடி கடந்த ஏப்ரல் மாதம் சமுக வலைதளங்களில் வலம் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சிடிக்கு பின்னணியில் இவரிடம் வேலை பார்த்து டிஸ்மிஸ் ஆன டிரைவர் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
சிடி போலியானது என டெல்லி கோர்ட்டில் டிரைவர் ஒப்புக் கொண்டார். சிடியை ஒளிபரப்ப டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த சிடி சுதந்திரமாக வெளிவந்தது. இதை தொடர்ந்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்து சிங்வி விலகினார். இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் அபிஷேக்மனு சிங்விக்கு மீண்டும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பணி நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த மணிஷ் திவாரிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அபிஷேக் மனுசிங்விக்கு கட்சி பதவி வழங்கப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.