எடியூரப்பாவின் புது கட்சியால் ம.ஜ.த.வுக்கு பாதிப்பு இல்லை : குமாரசாமி பேட்டி
பெங்களூர்: எடியூரப்பா தொடங்கும் புதிய கட்சியால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்தார். பா.ஜ. மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, டிசம்பர் 10-ம் தேதி புதிய கட்சி தொடங்கப்போவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்து இருக்கிறார். எடியூரப்பாவின் இந்த முடிவால் தங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என மதசார்பற்ற ஜனதா தள கர்நாடக பிரிவு தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: எடியூரப்பா தொடங்கும் புதிய கட்சியால் பா.ஜ.வுக்குதான் பாதிப்பே தவிர எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கர்நாடக மக்களிடத்தில் பா.ஜ. நம்பிக்கை இழந்துவிட்டது. பெங்களூர் நகரின் உள்ளேயும் வெளியேயும் 40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதில் பா.ஜ. அரசு தோல்வி அடைந்துவிட்டது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தேவகவுடா தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை பிடித்து அரசு அமைக்கும். கட்சியை பலப்படுத்த நாளை முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு குமாரசாமி கூறினார். பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் சாலை ஊழல் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, எடியூரப்பா மீது விசாரணை நடத்த லோக்ஆயுக்தா கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு, கோர்ட் உத்தரவை வரவேற்பதாகவும் இந்த விசாரணை உண்மைகளை வெளியே கொண்டு வரும் எனவும் குமாரசாமி தெரிவித்தார்.