கல்வராயன் மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள குக்கிராமம் முயல்கரடு. வனப்பகுதியின் அருகே இருப்பதால் இங்கு பசுமைக்கு பஞ்சமில்லை. 100 குடும்பங்கள் வரை வசிக்கும் முயல்கரடு கிராமம் கடந்த சில மாதங்களாகவே பயத்தின் பிடியில் இறுகி தவிக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிரள வைக்கிறது. ஒரு காலத்தில் காட்டு முயல்கள் நடமாட்டத்தால் இந்த பகுதிக்கு முயல்கரடு என பெயர் வந்ததாக கூறும் கிராமத்தினர், இப்போது அச்சப்பட்டுக் கொண்டிருப்பது ‘மோகினி’ நடமாட்டத்தால். இரவு நேரங்களில் ஆளரவமற்ற கிராமத்து சாலையில் திடீரென்று கேட்கும் கொலுசு சத்தமும், மயங்கடிக்கும் மல்லிகை வாசமும் இவர்களின் பயத்துக்கு அச்சாரம். இதற்கு உச்சக் கட்டமாய் கேட்கும் பெண்ணின் அழுகை சத்தம் ஆளையே நடுங்க வைத்து விடுகிறது என்கிறார்கள் கிராமவாசிகள். சாலையின் குறிப்பிட்ட இடத்தில் நள்ளிரவு நேரங்களில் அழுகை சத்தத்தை கேட்ட அனுபவம் பலருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். ‘கொலுசு சத்தமும், கேவி கேவி அழும் பெண்ணின் குரலும் வேறு எதுவுமில்ல, அது மோகினியோட வேலைதான். அந்த மோகினியால இன்னும் என்னென்ன ஆபத்து வருமோ’ என்று பயத்தில் ஆழ்ந்து கிடக்கிறது முயல்கரடு கிராமம். அழுகை சத்தத்தை கேட்ட அனுபவத்தை வார்டு உறுப்பினர் சரவணன் கூறியது திகிலாகவே இருக்கிறது. ‘இந்த பகுதி வயல்வெளி பக்கம் இருக்கிற பாதையில இருந்து, கேவி கேவி பொண்ணு ஒருத்தி அழும் சத்தம் கேட்பதாவும், கொலுசு சத்தமும், மல்லிகைப்பூ வாசம் அடிப்பதாவும் நிறைய பேர் சொன்னாங்க. நான் நம்பல. போன அமாவாசை அன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு அந்த பக்கமா போனப்ப, ஜல்..ஜல்னு கொலுசு சத்தம் கேட்டுச்சு. எனக்கு படபடக்க ஆரம்பிடுச்சு. என்னனு பாக்க டார்ச் அடிச்சு பார்த்தேன். எதுவும் தெரியல. திடீர்னு மல்லிகை வாசம் மூக்கை துளைச்சுது. மறுபடியும் கொலுசு சத்தம். கொஞ்ச நேரத்துல ஒரு பொண்ணு கேவி கேவி அழும் சத்தம் எனக்கு தெளிவா கேட்டுது. ரொம்ப ஏக்கமா அழுத மாதிரி இருந்துது. கொஞ்ச தூரம் போய் பாத்தப்போ, காத்துல ஏதோ மிதந்த மாதிரி தெரிஞ்சது. இப்படிதான் பாத்தவங்க நிறைய பேர் சொன்னாங்க’ என்று சொல்கிறார் சரவணன். இப்படி பலரும் ஒரே போல தங்களது அனுபவங்களை சொல்வதால், மோகினி நடமாட்டம் இருப்பதாக பயப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கிராம வாசிகள். இதனால் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதை குறைத்து கொண்டுள்ளனர். முயல்கரடில் எல்லா வீடுகளின் வாசலிலும் காவல் தெய்வ படங்களை மாட்டி வைத்துள்ளனர். இதுபற்றி முயல்கரடு பெரியவர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வசித்த இளம்பெண் ஒருத்தி, கல்யாணம் ஆகாமலே இறந்து போனா. அவளோட ஆவிதான் இப்ப மோகினியா ஏக்கத்தோட அலையுது’ என்றார். கிராமத்திலிருக்கும் பெண்கள் கூறுகையில், ‘இரவு நேரங்களில் மல்லிகை வாசம் அடிக்கும். கணீர்..கணீர்னு கொலுசு சத்தம் கேட்கும். யாரோ அழுகிற மாதிரி இருக்கும். வெளியில் போயி பாத்தா எதுவுமே இருக்காது. நாங்கள் யாரும் ராத்திரி 7 மணிக்கு மேல வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்ல. பிள்ளைகளையும் வெளியில அனுப்புறது கிடையாது. வெளியூருக்கு போனாலும் சீக்கிரம் வந்துடுவோம். கொஞ்சம் இருட்டிட்டாலும் அங்கேயே தங்கிடுவோம்’ என்கிறார்கள் சிறிதும் அச்சம் விலகாமல்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook