சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார் சச்சின் டெண்டுல்கர்
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் பேட்மின்டன் பிரிவில் இந்தியாவின் சாய்னா வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு பாராட்டு விழா ஆந்திர பிரதேச பேட்மின்டன் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு சாய்னாவுக்கு புதிய வகை பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். இந்த காரை ஆந்திர பேட்மின்டன் சங்க துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி நாத் வழங்கினார். விழாவில் சாய்னாவை பாராட்டி டெண்டுல்கர் பேசும்போது, வெண்கல பதக்கம் வென்றதால் சாய்னா மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால் திருப்தி அடைந்திருக்க மாட்டார் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். நாங்களும் திருப்தி அடையவில்லை. ஏனெனில் சாய்னாவின் திறமை இதைவிட பெரியது. கோபிசந்த் வழிகாட்டுதலில் இந்த திறமை அவருக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் உங்களது திறமை மேம்பட்டு கொண்டே வருகிறது. வெண்கல பதக்கம் வென்றதால் இந்தியாவே பெருமைப்பட்டது. இது எளிதாக வந்ததல்ல. அர்ப்பணிப்பு, கடினஉழைப்பு, ஒரே நோக்கத்தில் உழைத்ததால் கிடைத்தது. இந்த பாராட்டுகள் அனைத்தும் சாய்னாவுக்கு உரியது தான் என்று பாராட்டி பேசினார்.