வேலம்மாள் பள்ளியில் செஸ் வீரர் ஆனந்துக்கு பாராட்டு விழா
திருவள்ளூர் :உலக அளவில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் செஸ் விளையாட்டில் 5 முறை உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை வகித்தார். தாளாளர் எம்.வி.எம்.நாகமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜி.ஆர்.சாந்தி வரவேற்றார். செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு மலர் கிரீடம் சூட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, சதுரங்கப்போட்டியில் சாதனை படைத்து வரும் வேலம்மாள் பள்ளி மாணவர்களையும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டி ஆனந்த் பரிசு வழங்கினார். பள்ளி துணை முதல்வர் சீனிவாசன் நன்றி கூறினார்.