ஐதராபாத்: ஆந்திராவில் திருப்பதி உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுவிலக்கு மற்றும் கலால் வரித்துறை அமைச்சர் வெங்கட ரமணாவை சிபிஐ நேற்று கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், சிபிஐ கைது செய்யும் வாய்ப்பு இருப்பதால் முன்ஜாமீன் கோரி ஐதராபாத் நீதிமன்றத்தில் ஜெகன் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் எந்நேரமும் கைதாகலாம் என்பதால் ஐதராபாத்தில் பதற்றம் ஏற்பட்டது.
மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி இடைத்தேர்தலை தள்ளி வைக்கும் நோக்கத்திலேயே காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் சதி செய்கின்றன என ஜெகன் குற்றம் சாட்டினார். இந்நிலையில், இடைத்தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை என மாநிலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி பன்வார் லால் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்புக்கு 5 கம்பெனி சிறப்பு போலீஸ் படையை அனுப்ப தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவும், 10 கம்பெனி சிறப்பு போலீஸ் படையை அனுப்ப மகாராஷ்டிராவும் சம்மதித்துள்ளன என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook