எடியூரப்பா மீதான சுரங்க முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
புதுடெல்லி: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான சுரங்க முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுரங்க முறைகேட்டில் சிக்கி பதவி இழந்தார். இதை தொடர்ந்து அவர் மீது 5 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் அவர் 22 நாள் சிறைவாசம் சென்றார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார். மற்ற வழக்குகளில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்து. இதற்கிடையில் சுரங்க முறைகேடு தொடர்பாக லோக் அயுக்தா போலீஸ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என ஐகோர்ட் அறிவித்தது. இதை தொடர்ந்து மீண்டும் முதல்வர் பதவியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
இந்நிலையில் கர்நாடக சுரங்க முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி கடந்த வாரம் தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் மாஜி முதல்வர் எடியூரப்பா மீதான சுரங்க முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடலாம் என பரிந்துரை செய்தது. இது எடியூரப்பாவுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்பட்டது. இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை எடியூரப்பா ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் கர்நாடக சுரங்க முறைகேடு அறிக்கை மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை நடத்தியது. எடியூரப்பா மீதான புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.