சென்னை வந்துள்ள ஒடிசா முதல்வருக்கு ஜெயலலிதா விருந்து
சென்னை: சென்னை வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மதிய விருந்து அளித்து கவுரவித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து இன்று மதியம் 12.15 மணிக்கு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் சென்னை வாழ் ஒடிசா மக்கள் சங்கத்தின் 76வது உத்கல் திபஸ் சம்ரோகா2012 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொண்டு பேசினார்.
பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற விழா முடிந்ததும், தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்துக்கு சென்றனர். அங்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மதிய விருந்து அளித்து ஜெயலலிதா கவுரவித்தார். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்தும் இந்திய ஜனாதிபதி தேர்தல் பற்றியும் இரு முதல்வர்களும் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.