புதுடெல்லி: நான்காவது நாளாக நீடித்து வரும் ஏர் இந்தியா விமானிகளின் ஸ்டிரைக் காரணமாக, இன்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களை இயக்கி வரும் பைலட்கள் சுமார் 250 பேர் கடந்த செவ்வாய் கிழமை முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பதவி உயர்வு, போயிங் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், 4வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இன்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி, மும்பையில் இருந்து நியூயார்க், நியூஜெர்சி, சிகாகோ, டொரான்டோ, பிராங்க்பர்ட், லண்டன், பாரிஸ் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கான முன்பதிவும் வரும் 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமானிகள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தது. இதை விமானிகள் ஏற்கவில்லை. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் விமானிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்து விட்டது. விமானிகளுடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook