அதிபர் தேர்தல் வாக்குறுதி ஓரின சேர்க்கைக்கு ஒபாமா ஆதரவு
வாஷிங்டன்: ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவில் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்க கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஓரின சேர்க்கை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா முன்னர் கூறுகையில், இது பரிணாம வளர்ச்சி என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்து வெளிப்படையாக இல்லை. ஆதரவு தெரிவிக்கிறாரா இல்லையா என்று குழப்பும் வகையில் உள்ளது என்று ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் குறித்து என் குடும்பத்தார், நண்பர்களிடம் பல ஆண்டுகளாக ஆலோசனை நடத்தி வந்தேன். இப்போது ஓரின சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, ஓரின சேர்க்கைக்கு ஒபாமா ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.